புதுடில்லி: நம் நாட்டில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தில் இடம்பெற்றுள்ள விண்வெளி

புதுடில்லி: நம் நாட்டில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தில் இடம்பெற்றுள்ள விண்வெளி வீரர்களின் உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் வகையில், ‘இஸ்ரோ’ சார்பில், ‘மிஷன் மித்ரா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், வரும் 2027ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்வெளியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, லடாக்கின் லே பகுதியில் உள்ள 11,483 அடி உயரமான மலைச் சிகரங்கள் மீது பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளும் வகையில், ‘மிஷன் மித்ரா’ என்ற திட்டம் கடந்த 2ம் தேதி துவங்கியது.

வரும் 9ம் தேதி வரை நடைபெறும் இத்திட்டத்தில், ககன்யான் திட்டத்திற்கு தேர்வான வீரர்கள், விண்வெளிக்கு செல்லும் முன், அவர்களின் மனம், உடல், குழு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் பயிற்சி உதவும் எனவும் கூறப்படுகிறது.

விண்வெளியில் உள்ள குறைந்த ஆக்சிஜன், தீவிர குளிர், தனிமை, அழுத்தம் உள்ளிட்ட கடுமையான சூழலுக்கு ஏற்ப லே மற்றும் லடாக்கின் உயர்ந்த மலைச் சிகரங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படையின் ஏரோஸ்பேஸ் மருத்துவ நிறுவனம், கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த புரோட்டோபிளானட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை வடிவமைத்துள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களுக்கும் தரைக்கட்டுப்பாட்டு குழுக்களுக்கும் இடையே குழு ஒருங்கிணைப்பு மற்றும் அழுத்தத்தின் கீழ் முடிவெடுக்கும் திறன், உளவியல் ரீதியாக வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Source link