புதுடில்லி: நாடு முழுவதும் 2025-2026ம் கல்வியாண்டில் 43 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார இணையமைச்சர் அனுபிரியா படேல் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது;
தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி ஒரே கல்வியாண்டில் 11,682 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 8,967 முதுநிலை மருத்துவ பட்டங்களுக்கான இடங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. புதிய மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கும், இளங்கலை மற்றும் முதுகலை இடங்களை அதிகரிப்பதற்கும் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லுரிகள், நிறுவனங்களிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி உரிய ஆய்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளை பின்பற்றிய பிறகு அனுமதி அல்லது மறுப்பு கடிதம் வழங்கப்படுகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தற்போதுள்ள மாவட்ட பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக்கல்லூரிகளை நிறுவுதல் என்ற மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்துகிறது.
வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு 90க்கு 10 என்ற விகிதத்திலும், மற்றவற்றுக்கு 60க்கு 40 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதிப் பகிர்வுடன், தற்போதுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத, வசதி குறைந்த பகுதிகள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 157 மருத்துவக் கல்லூரிகள் மூன்று கட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மொத்த ஒப்புதல் செலவு ரூ. 41,332.41 கோடி ஆகும். இதில் மத்திய பங்கான ரூ. 26,715.84 கோடியில் இதுவரை ரூ. 23,246.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார இணையமைச்சர் அனுபிரியா படேல் கூறி உள்ளார்.
