புதுடில்லி: பண மூட்டை விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும்

புதுடில்லி: பண மூட்டை விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் பார்லி விசாரணை குழு விசாரணை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அங்குள்ள அரசு பங்களாவில் வசித்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, வீட்டில் உள்ள ஓர் அறையில், எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன.

பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர்.

இதை ஏற்ற ஓம்பிர்லா, விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பார்லிமென்ட் குழு விசாரணையை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதன்படி பார்லி விசாரணைக்குழு விசாரணையை தொடங்கியது. தற்போது பார்லி விசாரணைக்குழு, விசாரணை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

லோக்சபா சபாநாயகரால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தாவும் ஒருவர். இவர் வரும் மார்ச் 6ம் தேதி பதவி ஓய்வு பெற இருப்பதால், விசாரணை நடவடிக்கை வேகமெடுத்துள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணைக்குழு உறுப்பினர்கள் விசாரணை மேற்கொண்டனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link