புதுடில்லி: பதர்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில், 65 வயது முதியவர் உடல் கருகி உயிரிழந்தார்.
தென்கிழக்கு டில்லி பதர்பூர் மோலர்பந்த்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் உள்ள குளியலறையில் நேற்று முன் தினம் இரவு தீப்பற்றியது.
தகவல் அறிந்து, போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் வந்தனர். தீயை அணைத்து, குளியல் அறைக்குள் காயங்களுடன் மயங்கி கிடந்த வீனு சிங்,65, என்பவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத அந்த குளியலறையில் மரப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. வீனு சிங் பீடி குடிப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
அவர் வீசிய தீக்குச்சி மரப்பொருட்களில் விழுந்ததால் தீப்பற்றி பரவியுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால், வீனு சிங் மருமகள் மம்தா சிங் கூறுகையில், “காஸ் குழாயில் கசிவு ஏற்பட்டு குளியலறையில் காஸ் பரவியிருந்துள்ளது. அது தெரியாமல் தீக்குச்சியை பற்ற வைத்ததால் தீப்பற்றி இருக்கலாம். ஆனால், எங்களுக்கு காஸ் வாசனை வரவில்லை,”என்றார்.
வீனு சிங் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிகின்றனர்.
தெற்கு டில்லி அந்தேரியா மோர், சத்தர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நேச்சர் பஜாரில் நேற்று காலை, 7:30 மணிக்கு தீப்பற்றியது.
50 கடைகள் சாம்பல் தகவல் அறிந்து, 10 வண்டிகளில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
கைவினைப் பொருட்கள் விற்கும் 50 கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகின. மூன்று மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
