புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு, இன்று துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானம் குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ளது. எனவே, வரும் 11ம் தேதி வரை எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தவறாமல் ஆஜராக வேண்டும் என, ஆளும் பா.ஜ.,வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, ஜனாதிபதி உரையுடன் கடந்த ஜனவரி 28ல் துவங்கியது. பிப்ரவரி 13 வரை நடந்த முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நராவனே எழுதிய புத்தகம் போன்றவற்றை, எதிர்க்கட்சிகள் பிரச்னையாக எழுப்பின.
கடும் அமளி
அப்போது, ‘பிரசுரிக்கப்படாத ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி சபையில் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது’ என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமாக கூறினார். இதனால், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசுவதற்கு அனுமதிக்காமல், சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக, காங்., – தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. மேலும், சபையின் மையப்பகுதிக்கு சென்று காகிதங்களை கிழித்தெறிந்து கடும் அமளியிலும் ஈடுபட்டன.
இதையடுத்து, காங்., – எம்.பி., மாணிக்கம் தாகூர் உட்பட எட்டு எதிர்க்கட்சி எம்.பி.,க்களை கூட்டத்தொடர் முழுதும் சபாநாயகர் ஓம் பிர்லா, ‘சஸ்பெண்ட்’ செய்தார். அதனால், லோக்சபா சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து, அதன் மீது விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 118 பேர் கையெழுத்திட்டு, லோக்சபா செயலரிடம் ‘நோட்டீஸ்’ அளித்தனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று துவங்க உள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
60 லட்சம் பேர்
குறிப்பாக, மேற்காசியாவில், இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே மோதல் முற்றி வரும் சூழலில், ஈரான் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு; ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு; மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம், 60 லட்சம் பெ யர்களை நீக்கியது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தீர்மானித்துள்ளன.
இரண்டாம் கட்ட அமர்வில், சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனேகமாக, இன்றே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என தெரிகிறது. எனவே, பா.ஜ.,வும், காங்கிரசும் பரஸ்பரம் தங்கள் எம்.பி.,க்களை, வரும் 11ம் தேதி வரை தவறாமல் ஆஜராக வேண்டும் என, கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
பதவி நீக்க தீர்மானம் குறித்த விவாதத்தின் போது, சபையை சபாநாயகர் ஓம் பிர்லா வழிநடத்த மாட்டார். ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வரிசையில், மத்திய அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் அமர்ந்து, சபை நடவடிக்கைகளை கவனிப்பார். எனினும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் உரிமை அவருக்கு உண்டு.
தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், எதிர்க்கட்சிகளிடம் அதற்கான பெரும்பான்மை பலம் கிடையாது. எனவே, மத்திய அரசு அதை எளிதாக முறியடித்து விடும்.
இரண்டாம் அமர்வின் முதல் நாளான இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. கடந்த பிப்., 19ல் மறைந்த ஷில்லாங் எம்.பி., ரிக்கியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்படும்.
