புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எட்டு எம்.பி.,க்கள் மீதான நடவடிக்கை இன்று ரத்து செய்யப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன்,ஜன., 28ல், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில், காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி, லோக்சபாவில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே பிரச்னையை வலியுறுத்தி பிப்., 3லும் போராட்டம் நடந்தது. அப்போது, சபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறி, காங்., – எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், குர்ஜித் சிங் அவுஜ்லா, ஹிபி ஈடன், கிரண் குமார் ரெட்டி உள்ளிட்ட ஏழு பேர், மார்க்.கம்யூ., – எம்.பி., வெங்கடேசன் ஆகியோரை, கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதை கண்டித்து சஸ்பெண்ட் ஆன எம்.பி.,க்கள் பார்லி., படிக்கட்டுகளில் அமர்ந்து தினந்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்., 2 வரை நடக்கவுள்ள நிலையில், எம்.பி.,க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை, இன்று ரத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
