புதுடில்லி: பாலம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 9 பேர் தீ விபத்தில் உயிரிழந்தது குறித்து, நீதித்துறை

புதுடில்லி: பாலம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 9 பேர் தீ விபத்தில் உயிரிழந்தது குறித்து, நீதித்துறை விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

டில்லி பாலம் பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, டில்லி முதல்வர் ரேகா குப்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மாவட்ட நிர்வாகம், டில்லி தீயணைப்புத் துறை மற்றும் டில்லி மாநகர போலீசார் விரைந்து செயல்பட்டும், ஒன்பது பேர் உயிரிழந்து விட்டனர்.

உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டு கிறேன். இந்தச் சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப் படுகின்றன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவர்னர் ஆலோசனை பாலம் தீ விபத்தை அடுத்து, டில்லி துணைநிலை கவர்னர் தரஞ்சித் சிங் சந்து தலைமையில், டில்லி பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் நடந்தது .

முதல்வர் ரேகா குப்தா, டில்லி தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, மாநகர போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்ச்சார் மற்றும் டில்லி அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பாலம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மழைக்காலத்தில் டில்லியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் சமையல் எரிவாயு சப்ளை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

டில்லி மாநகர் முழுதும் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின், சமூக வலைதளத்தில் கவர்னர் தரஞ்சித் சிங் வெளியிட்டுள்ள பதிவு:

பாலம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து துரதிர்ஷ்ட வசமானது.

இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாநகர் முழுதும் குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link