புதுடில்லி: பா. ஜ., செய்தித் தொடர்பாளராக இருப்பவர், ஜெயவீர் ஷேர்கில். இவர், காங்கிரசிலிருந்து பா.ஜ.,வுக்கு

புதுடில்லி: பா. ஜ., செய்தித் தொடர்பாளராக இருப்பவர், ஜெயவீர் ஷேர்கில். இவர், காங்கிரசிலிருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர். சமீபத்தில் இவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், காங்கிரசில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

‘பார்லிமென்ட், ஜனநாயகத்தின் கோவில் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த கோவிலில் சிலர், ‘டி ஷர்ட், கார்கோ பேன்ட்’ அணிந்து வருகின்றனர். இந்த உடைகளை தடை செய்ய வேண்டும்’ என பதிவிட்டிருந்தார் ஷேர்கில்.

அவர், ராகுல் பெயரை குறிப்பிடாவிட்டாலும், ஷேர்கில் அவரை தான் குறிவைத்துள்ளார் என்பது, அனைவருக்குமே தெரியும். ஷேர்கில் கூறியது போல, டி – ஷர்ட் மற்றும் கார்கோ பேன்டில் தான், அதிக சமயங்களில் பார்லிமென்டிற்கு வருகிறார் ராகுல். உடனே, ‘பார்லி., மற்றும் சட்டசபைகளில் டி — ஷர்ட் அணியலாமா, கூடாதா?’ என, டில்லி ‘டிவி’ சேனல்களில் விவாதங்கள் துவங்கி விட்டன.

‘சமையல் எரிவாயு தட்டுப்பாடு, சர்வதேச பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவே, பா.ஜ., இப்படி சொல்லியுள்ளது’ என, காங்., தெரிவிக்க, அதற்கு பா.ஜ., மீண்டும் பதிலடி கொடுத்தது. ராகுல் பார்லி.,க்கு வரும் போது டி – ஷர்ட் அணியக்கூடாது என, காங்., மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், நேரடியாக அவரிடம் இதை கூற தயங்குகின்றனராம்.

‘தமிழகத்திலும், டி – ஷர்ட் அணிந்து தான் சட்டசபைக்கு உதயநிதி வருகிறார். 2019ல், தமிழக அரசு ஆடை கட்டுப்பாடு தொடர்பாக ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக உதயநிதி செயல்படுகிறார்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

Source link