புதுடில்லி: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மட்டும் இல்லையென்றால், இந்த உலகம் பயங்கரவாதிகளினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி விடும் என்று அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், அமெரிக்க பத்திரிக்கையாளருமான லாரா லூமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிரபல தனியார் செய்தி நிறுவனம் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதாவது; முஸ்லிம் பயங்கரவாதம் என்பது உலகளவில் பெரும் அச்சுறுத்தல்மிக்கது. இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதிபர் டிரம்புக்கு இந்தியா மிகவும் பிடித்த நாடு. அவருக்கு பிரதமர் மோடியையும் ரொம்ப பிடிக்கும். பாகிஸ்தான் முஸ்லிம் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக திகழ்கிறது. இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான வளர்ந்து வரும் ஒத்துழைப்பு, உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மிக அவசியம்.
இந்தியாவுக்கு எதிராக முன்பு நான் பதிவிட்ட கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தியா அல்லது இந்துக்கள் மீது எனக்கு எந்தப் பகையும் இல்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
