புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., இயக்குநர் விவேக் பன்சாலின் பிரயாக்ராஜ் பயணத்திற்காக வி.வி.ஐ.பி., கலாசாரத்துடன் செய்யப்பட்ட ஏற்பாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கங்கையில் அவர் நீராட வசதியாக உள்ளாடை முதல் ஷாம்பூ வரை வாங்குவதற்கு, 50 அதிகாரிகளை நியமித்த விவகாரம் மத்திய அரசை கொந்தளிக்க வைத்துள்ளது.
பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., எனப்படும், பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட் இயக்குநராக பணியாற்றி வருபவர் விவேக் பன்சால்.
சமூக வலைதளம்
உ.பி.,யின் பிரயாக்ராஜில் ஓடும் திரிவேணி சங்கமத்தில் நீராடி, அருகில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தார். இதற்காக நேற்றும், இன்றும் பிரயாக்ராஜில் அவர் பயணம் செய்ய திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக துறை ரீதியான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. உயரதிகாரி என்பதால், தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்வது வழக்கமானது தான். ஆனால், அதையும் தாண்டி கங்கையில் குளித்த பின் உடலை துடைக்க டவல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, உள்ளாடை ஆகியவற்றை வாங்கி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இப்படி ஆண்களுக்கு ஆறு செட்களும், பெண்களுக்கு இரு செட்களும் வாங்கி, படித்துறையில் தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகளுக்காக பி.எஸ்.என்.எல்., பொதுத்துறை நிறுவனத்தின் 50 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
நடவடிக்கை
இது தவிர, அவர் தங்கும் ஹோட்டல் அறையில் உலர் பழங்கள், பழங்கள், முகச்சவரம் செய்வதற்கான ‘கிட்’கள், டவல், டூத் பேஸ்ட், பிரஷ், சோப், ஷாம்பூ, சீப்பு மற்றும் தலைக்கு தேய்க்க தேங்காய் எண்ணெய் ஆகியவையும் தயாராக வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. துறை ரீதியாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாக, நஷ்டத்தில் இயங்கும் ஒரு பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குநருக்கு இத்தனை ஆடம்பரம் தேவையா? அதுவும் சோப்பு, சீப்பு முதல் உள்ளாடை வரை வாங்கி வைக்க 50 ஊழியர்களை நியமிக்கலாமா என பலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால், பெரும் சர்ச்சை வெடித்ததை தொடர்ந்து விவேக் பன்சாலின் பிரயாக்ராஜ் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட தற்போது விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், ”விவேக் பன்சாலின் இந்த ஆடம்பர ஏற்பாடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. முறையற்ற, விதிமீறிய நடத்தை குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.”ஒரு வாரத்திற்குள் சரியான விளக்கத்தை அவர் அளிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
