புதுடில்லி: ''புதிய மின்சார வாகனக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்,'' என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.

புதுடில்லி: ”புதிய மின்சார வாகனக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.

டில்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், 500 மின்சார பஸ்களை முதல்வர் ரேகா குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது, ரேகா குப்தா பேசியதாவது:

டில்லி அரசுப் போக்கு வரத்துக் கழகத்தில் மின்சார பஸ்களின் எண்ணிக்கை, 4,000 ஆக உயர்ந்துள்ளது. வரும், 2028-ம் ஆண்டுக்குள், மாநகர் முழுதும் 14,000 மின்சார பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு உறுதி

மின்சார பஸ்களால் காற்றின் தரம் மேம்படும். அதேநேரத்தில் போக்குவரத்து தேவையும் நிறைவடையும்.

இந்த மின்சார பஸ்கள் அனைத்துமே தாழ்தளம் கொண்ட ஏ.சி., வசதி கொண்டவை. அவசரகால பட்டன் உட்பட அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் முழுதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநகரில் மட்டுமின்றி, டில்லி – பானிபட் இடையே மூன்று மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவைகளும் துவக்கப்பட்டுள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகம் மேம்பாட்டு பணியை தொய்வின்றி செய்து வருகிறது.

மத்திய கூட்டுறவுத் துறை அறிமுகம் செய்துள்ள, ‘பாரத் டாக்ஸி’யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

டில்லி மக்களின் பொதுப்போக்குவரத்து தேவையை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. புதிய மின்சார வாகனக் கொள்கை மற்றும் மின்சார ஆட்டோ கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, பா.ஜ., தேசியத் தலைவர் நிதின் நபின் பேசியதாவது:

ராஜதந்திரத்துடனும் பொறுமையுடனும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் வாயிலாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்து, நாட்டின் சுயமரியாதையை பிரதமர் மோடி மேம்படுத்தியுள்ளார்.

பாராட்டுக்குரியது

கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.,வை தேர்ந்தெடுத்த டில்லி மக்களுக்கு, 500 மின்சார பஸ்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

டில்லியில் பா.ஜ., அரசு ஓராண்டாக ஊழலுக்கு சற்றும் இடமளிக்காமல், பொறுப்பான முடிவுகளை எடுப்பது மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தை ஊக்குவிப்பது போன்ற கொள்கைகளுடன் செயல்படுகிறது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தை பா.ஜ., பொறுப்பேற்றவுடன் தான் நிறைவேற்றியது.

முந்தைய ஆம் ஆத்மி அரசு, வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாமல், காரணங்களை மட்டுமே கூறி வந்தது. ஆனால், பா.ஜ., அரசுப் பொறுப்பேற்றவுடன் தான், மேம்பாட்டுப் பணிகளை தொய்வின்றி செய்து வருகிறது. ஏழைகளுக்கு, 5 ரூபாய் விலையில் உணவு வழங்க மாநகர் முழுதும், ‘அடல் கேன்டீன்’ திறக்கப்படுவது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள் கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source link