புதுடில்லி: 'பேஸ்புக்' சமூகவலைதளத்தில் பொருட்களை விற்பனை செய்யும், 'மார்க்கெட் பிளேஸ்' பிரிவில்

புதுடில்லி: ‘பேஸ்புக்’ சமூகவலைதளத்தில் பொருட்களை விற்பனை செய்யும், ‘மார்க்கெட் பிளேஸ்’ பிரிவில் அனுமதியின்றி, ‘வாக்கி டாக்கி’ சாதனங்கள் விற்கப்பட்டதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து, ‘பேஸ்புக்’கின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

‘பேஸ்புக்’ சமூகவலைதளத்தில், ‘மார்க்கெட் பிளேஸ்’ என்ற ஒரு வசதி உள்ளது. இதில், பொருட்களை விற்க விரும்புவோர் புகைப்படத்துடன் பதிவு போடலாம். வாங்க விரும்புவோர் நேரடியாக விற்பவரை தொடர்கொள்ள முடியும்.

புகார்

இந்த தளத்தில் சமீபத்தில் சட்ட அனுமதி ஏதுமின்றி, ‘வாக்கி டாக்கி’ எனப்படும், தகவல் தொடர்பு சாதனம் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டது. இது குறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் சென்றது.

அதை விசாரித்த அவர்கள், இவற்றை கட்டுப்படுத்த தவறியதற்காக, ‘பேஸ்புக்’ நிறுவனத்திற்கு, ‘ஆன்லைன்’ வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதை எதிர்த்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதன் விபரம்: ‘பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ்’ ஆன்லைன் வர்த்தக தளம் கிடையாது. தனிநபர்கள் தங்களது பொருட்களை பரிமாறி கொள்ளும் இலவச சேவை மட்டுமே.வணிக நிறுவனங்களுக்கு இதில் இடமில்லை. வாங்கல், விற்பனைக்கு தேவையான எந்த தொழில்நுட்ப அமைப்பையும் பேஸ்புக் வழங்கவில்லை.

பயனர்களிடமிருந்து எந்த வகையிலும் கமிஷன் அல்லது கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதனால், ஆன்லைன் வர்த்தக விதிகளின் கீழ் நடவடிக்கை எடுத்தது தவறு.

கேள்வி

இந்த அணுகுமுறை நடைமுறைக்கு வந்தால், ஆன்லைன் செய்தித்தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களும் இதே விதிகளுக்குள் கொண்டு வரப்படும். மேலும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தன் அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், ”நீங்கள் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனுக்கு செல்லாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது ஏன்? மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவு அதிகார வரம்பிற்கு உட்படாதது என எவ்வாறு கூற முடியும்?” என கேள்வி எழுப்பி, வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link