புதுடில்லி: போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை நடத்தினார். 4வது முறையாக இந்த ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் வேகப்படுத்தி உள்ளன. போர் தொடங்கி 14 நாட்களை எட்டி உள்ளது. எப்போது குண்டுமழை சத்தம் ஓயும் என்று தெரியாத நிலையில், வெற்றி மிக அருகில் என்று டிரம்ப் தொடர்ந்து அறிவித்து வருகிறார். போரை நிறுத்தமாறு உலக நாடுகளும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன.
இந் நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியும் தொலைபேசில் உரையாடி உள்ளனர். இருவரும், தற்போதுள்ள சூழல் குறித்து விரிவாக பேசி உள்ளனர். பிராந்திய மற்றும் உலகளவில் போரின் தாக்கம் குறித்தும் இருவரும் முக்கிய ஆலோசனையை நிகழ்த்தி உள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது, நாட்டை பாதுகாக்க ஈரான் எடுத்து வரும் முயற்சிகள், தொடரும் தாக்குதல்களுக்கு அளித்து வரும் பதிலடி மற்றும் தற்போதுள்ள போர்ச்சூழல் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம், அரக்சி விரிவாக விளக்கி கூறி இருக்கிறார்.
மேலும், ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும், பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவத்தையும் அரக்சி எடுத்துரைத்தார். பிராந்திய மற்றும் சர்வதேச அரங்கில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் விளக்கி உள்ளார்.
இருவரின் இந்த ஆலோசனையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தமது எக்ஸ் வலைதள பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதில், ஈரான் வெளியுறவு அமைச்சருடன் மீண்டும் பேசி இருக்கிறேன். இரு தரப்பு விவகாரங்கள், பிரிக்ஸ் நாடுகளின் பிரச்னைகள் குறித்து விவாதித்தோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
