புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரும் முடிவை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லி., மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும், ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ என்ற சட்டம், 2023ல் நிறைவேற்றப்பட்டது. எனினும் இது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதிகள் மறுவரையறை முடிந்த பின் தான் அமலுக்கு வரும்.
தற்போதைய நிலவரப்படி, 2027-ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும். இதனால், 2029 லோக்சபா தேர்தலுக்குள் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட, 2011 மக்கள் தொகை கணக் கெடுப்பு அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதன்படி, லோக்சபா மொத்த இடங்களின் எண்ணிக்கை தற்போதைய, 543-லிருந்து, 816 -ஆக உயர்த்தப்படும்.
இதில், மகளிருக்கு இட ஒதுக்கீடான, 33 சதவீதம் அதாவது, 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேவைப்பட்டால், பார்லி., சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் அல்லது வரும் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
