புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் வகையில், லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை, 543-லிருந்து, 816 -ஆக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற, வரும் 16ல் பார்லி., மீண்டும் கூடுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் சிறப்பு கூட்டத்தொடரில், விவாதம் நடத்தி மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், ஜன., 28ல் துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில், ஆந்திராவின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா, திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
பார்லி., மற்றும் மாநில சட்டசபைகளில், மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும், ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டம், 2023 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது . எனினும் இது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்தான் அமலுக்கு வரும்.
அழைப்பு
தற்போதைய நிலவரப்படி, 2027ல் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும். இதனால், 2029 லோக்சபா தேர்தலுக்குள் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட முடிவெடுத்த மத்திய அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது.
இதற்காக அந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவுள்ளது. இதன்படி, லோக்சபா இடங்களின் எண்ணிக்கை, 543ல் இருந்து, 816 ஆக அதிகரிக்கப்படும். இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான மசோதாக்களை நிறைவேற்ற, வரும் 16ல் பார்லி., மீண்டும் கூடுகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில், விவாதம் நடத்தி மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகாரத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு ராஜ்யசபாவில் நேற்று கூறுகையில், ”அரசிடம் சில முக்கிய மசோதாக்கள் உள்ளன. இவை குறித்து எதிர்க்கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
”அடுத்த 2 – 3 வாரங்களில் மிக முக்கியமான மசோதாவை கொண்டு வரப் போகிறோம். விரைவில் நாம் மீண்டும் சந்திப்போம். எதற்காக பார்லி., மீண்டும் கூடப்போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே,” என்றார். மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவுக்காக, பார்லி., மீண்டும் கூடப் போகிறது என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்தார்.
உரிமை
காங்., – எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ”தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி, இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் தேர்தலில் ஆதாயம் பெற அரசு முயற்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது கண்டிக்கத்தக்கது. வரும் 29-க்கு பின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்,” என்றார்.
இதற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, ”நாட்டின் பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. இதற்கும் குறிப்பிட்ட மாநில சட்டசபை தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கால வரம்பை கருதி, நாம் இதை முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டும். இந்த முக்கியமான விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்,” என்றார்.
காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ”நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். ஆனால் எப்போது, எப்படி மசோதாவை கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு விளையாடக்கூடாது,” என்றார்.
இதற்கு பதிலளித்த சபை முன்னவரும், மத்திய அமைச்சருமான நட்டா, ”ஒரு சட்டத்தை எப்போது கொண்டு வர வேண்டும் என்பதை தீர்மானிக்க அரசுக்கு உரிமை உண்டு,” என்றார்.
