புதுடில்லி: மத்திய அரசால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில், 11.40 கோடி ரூபாய் மோசடி செய்த தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முறைகேடு
உயர்கல்வி சேர்க்கை, சீருடை, காலணி மற்றும் குடை வழங்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குடை வழங்க பகிரப்பட்ட உதவித்தொகையில் முறைகேடு நடந்ததாக, 2024ம் ஆண்டு இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலர் அளித்த புகாரின்படி, நாடு ழுழுதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஓராண்டாக விசாரணை நடத்தினர்.
இதில், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து சி.பி.ஐ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுதும், 28 கல்வி நிறுவனங்களில், 926 மாணவர்களை மையப்படுத்தி உதவித்தொகை முறைகேடு நடந்தது தெரியவந்தது. அவர்களுக்கு 11.40 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விசாரணையில், உதவித்தொகை வழங்கப்பட்டதாக கூறப்படும் கல்வி நிறுவனங்கள் செயல்பாட்டிலேயே இல்லை என தெரியவந்தது.
விசாரணை
இல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதாக உத்தர பிரதேசம், தமிழகம், கேரளா, ஜம்மு – காஷ்மீர் மற்றும் டில்லி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கணக்கு காண்பித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. ஜம்மு – காஷ்மீரில் செயல்பட்ட ஒரு கல்வி நிறுவனம், 2017லேயே மூடப்பட்ட நிலையில், போலி பயனர்களின் பெயரில் தேசிய உதவித்தொகை இணையதளத்தை பயன்படுத்தி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் போலி மாணவர்கள் பெயரில் உதவித்தொகை மோசடி அரங்கேறியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
