புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி

புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி 6ம் வகுப்பு முதல் மும்மொழிகள் கற்பது கட்டாயமாகிறது, 9ம் வகுப்பு முதல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், ‘ஸ்டாண்டர்டு’ மற்றும் ‘அட்வான்ஸ்டு’ என இரு நிலைகள் வழங்கப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் கட்டாயமாக மும்மொழிகள் கற்பது சில பள்ளிகளில் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கை பரிந்துரைப்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 6ம் வகுப்பில் இருந்து மும்மொழிகள் கற்பதை கட்டாயமாக்க உள்ளனர்.

இது குறித்து சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கைப்படி மூன்று மொழிகள் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மூன்றாவது வெளிநாட்டு மொழியாக இருக்கும். 2026 – 27 கல்வியாண்டில் 6ம் வகுப்பில் இருந்து இது துவங்குகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளை கற்கும் நிலை உறுதி செய்யப்படும். மேலும், நடப்பு கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இரு நிலை அறிமுகப்படுத்தப்படுகிறது.

அனைத்து மாணவர்களும் கட்டாயமாக, ‘ஸ்டாண்டர்டு’ பாடத்திட்டத்தை படித்து, 80 மதிப்பெண் கொண்ட மூன்று மணி நேர பொதுத் தேர்வை எழுத வேண்டும்.

மேம்பட்ட திறன் விரும்பும் மாணவர்கள், ‘அட்வான்ஸ்டு’ நிலையை கூடுதலாக தேர்வு செய்யலாம். இது 25 மதிப்பெண் கொண்ட ஒரு மணி நேர தனி தேர்வாக இருக்கும்.

‘அட்வான்ஸ்டு’ தேர்வின் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பெறும் மாணவர்களுக்கு, அது தனியாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link