புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து, ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார். ஈரானில் வன்முறை அதிகரிப்பு, பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் குறித்து அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது: மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும், கடுமையான நிலை குறித்து, ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியான் உடன் தொலைபேசியில் பேசினேன்.
அங்கு அதிகரித்து வரும் பதற்றம், பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பும், பொருட்கள் மற்றும் எரிசக்தி போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.
பிரச்னைக்கு, போர் தீர்வு அல்ல; பேச்சுவாரத்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரானில், சுமார் 9 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
