புதுடில்லி: மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலகின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகவும், ஐந்தாவது பெரிய பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியாளராகவும் இந்தியா உள்ளது.
150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எரிபொருளை வழங்குகிறது. உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி இயங்குகின்றன. எல்.பி.ஜி., மற்றும் எரிபொருள் வினியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களிலும் போதுமான இருப்பு உள்ளது.
ஒரு சில இடங்களில், தேவையற்ற பயம் காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் வாகன ஓட்டிகள் முண்டியடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, சமூக ஊடகங்கள் வாயிலாக பெரிதுபடுத்தப்படுகிறது. தவறான தகவல்கள் பரப்பப்பட்டு, வேண்டுமென்றே தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். மக்கள் நலனுக்காக எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இரவு முழுதும் செயல்படுகின்றன. தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு கடன் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நிலவினாலும், முன்பை விட 40க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்களிடம் இருந்து அதிகளவில் இந்தியா கச்சா எண்ணெய் பெறுகிறது. அடுத்த ஆறு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறும் அறிக்கைகள் தவறானவை. அடுத்த 74 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளது.
இதனால், அடுத்த இரு மாதங்களுக்கான வினியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கச்சா எண்ணெய் கொள்முதலும் நடந்து வருகிறது. உள்நாட்டு எல்.பி.ஜி., உற்பத்தி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து 8 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் 50 லட்சத்துக்கும் அதிகமான சிலி ண்டர்களை வினியோகிக்கின்றன. பதுக்கலைத் தடுக்க வணிக ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
