புதுடில்லி: ” முன்னாள் ராணுவ தளபதி நரவானே பொய் சொல்வார் என நான் நம்பவில்லை. அவரும், புத்தக உரிமையை வைத்துள்ள நிறுவனமும் உண்மையை சொல்ல முடியாது” என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேச அமளி ஏற்பட்டது. இது தொடர்ந்து நீடிக்க அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால், லோக்சபாவில் பதிலளிக்க பிரதமர் மோடி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனிடையே, நரவானேஎழுதிய ‘Four Stars of Destiny’ புத்தகத்தின் உரிமையை வைத்துள்ள பென்குயின் ரேன்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம், ‘ நரவானேயின் புத்தகம் இன்னும் வெளியிடவில்லை’ என விளக்கம் அளித்துஇருந்தது.
அதிகாரப்பூர்வமாக வெளியாகாத முன்னாள் ராணுவதளபதியின் புத்தகத்தின் பிரதிகள் சமூக ஊடகங்களில் வெளியானது தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியதாவது: வணக்கம் நண்பர்களே, என்னுடைய புத்தகம் இப்போது கிடைக்கிறது. இணைப்பை பின் தொடரவும் என நரவானே முன்பு ட்வீட் செய்து இருந்தார். அவர் பொய் சொல்கிறாரா. அதனை நான் நம்பவில்லை. அல்லது புத்தகத்தின் உரிமை பெற்றுள்ள பென்குயின் நிறுவனம் பொய் சொல்கிறதா? இருவரும் உண்மையை சொல்ல முடியாது. புத்தம் வெளியிடப்படவில்லை என்று பென்குயின் சொல்கிறது.
ஆனால் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. நரவானே, 2023 ல் ‘ தயவு செய்து எனது புத்தகத்தை வாங்கவும்,’ என ட்வீட் செய்துள்ளார். பென்குயின் நிறுவனத்தை காட்டிலும் நரவானேயை நான் நம்புகிறேன். நீங்கள், நரவானேயை விட பென்குயினை நம்புகிறீர்களா? இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் சிலவற்றை அந்த புத்தகத்தில் நரவானே வெளியிட்டு உள்ளார் என்று நான் நம்புகிறேன். பென்குயின் உண்மையை சொல்கிறதா அல்லது நரவானே உண்மையை சொல்கிறாரா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.
