புதுடில்லி: மேற்காசியாவில் நடக்கும் போரில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதை

புதுடில்லி: மேற்காசியாவில் நடக்கும் போரில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்த போர் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

சவுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்தில் நடந்த நிகழ்வு காரணமாக நேற்று முன்தினம் மார்ச் 18 ம் தேதி ரியாத் நகரில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தோடு தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம் எனத் தெரிவித்து உள்ளது.

டில்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வளைகுடா நாடுகளுக்கான கூடுதல் செயலாளர் அசீம் மஹாஜன் கூறியதாவது: 18 ம் தேதி ரியாத் நகரில் நடந்த தாக்குதல் காரணமாக இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளது குறித்த தகவல் நேற்று இரவு கிடைத்துள்ளது. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தோடு இந்தியத் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவரது உடல் விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கு சவுதி அதிகாரிகளுடன் இணைந்து தூதரகம் பணியாற்றிவருகிறது. மேற்காசியாவில் நடக்கும் மோதல் காரணமாக 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவரை காணவில்லை. சவுதி அரேபியா, ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து காணாமல் போன இந்தியரை மீட்கவும், அங்கிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரவும் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர்

இவ்வாறு அவர் கூறினார்.

Source link