புதுடில்லி: ''மேற்காசிய பிராந்தியத்தில் தற்போது நிலவும் மோதல்கள் போன்ற எதிர்பாராத உலகளாவிய நெருக்கடியை

புதுடில்லி: ”மேற்காசிய பிராந்தியத்தில் தற்போது நிலவும் மோதல்கள் போன்ற எதிர்பாராத உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, 1 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நிலைத்தன்மை நிதி தொகுப்பு அறிவிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் இது உதவும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் நேற்று, பட்ஜெட் மீதான துணை மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர் மலா சீதாராமன் பேசினார்.

அப்போது, அவரை பேச விடாமல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும், சபையின் மையப் பகுதிக்கு வந்து அவர்கள் முழக்கமிட்டனர்.

கூடுதல் செலவினம்

கடும் அமளிக்கு மத்தியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

மேற்காசிய பிராந்தியத்தில் தற்போது நிலவும் மோதல்கள் போன்ற எதிர்பாராத உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, 1 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நிலைத்தன்மை நிதி தொகுப்பு அறிவிக்கப்படுகிறது.

இது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

எதிர்பாராத நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து எதிர்கொள்ளும் வகையில், இந்த பொருளாதார நிலைத்தன்மை நிதியை கொண்டு வருகிறோம். இதற்கான மொத்த மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்.

இதில் நிகர ரொக்க செலவு, 57,381.84 கோடி ரூபாய். மீதமுள்ள தொகை அரசின் சேமிப்பிலிருந்து ஈடுசெய்யப்படும். இந்த கூடுதல் செலவினமானது, 2025 – -26ம் நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

திருத்தப்பட்ட மதிப்பீடு களின்படி, இது பட்ஜெட்டில் கணிக்கப்பட்டவாறே மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.4 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும்.

பட்ஜெட் என்பது ஓராண்டுக்கான முன்கூட்டிய கணிப்பு தான். ஆனால், இடையில் போர் அல்லது வினியோகத் தொடர் பாதிப்பு போன்ற எதிர்பாராத சவால்கள் வரும்போது, அதற்கு தேவையான நிதியை உருவாக்குவது சமயோசித நடவடிக்கை.

துணை மானிய கோரிக்கைகளை கொண்டு வருவது, மோசமான பட்ஜெட் திட்டமிடல் என எதிர்க்கட்சிகள் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது; முற்றிலும் தவறானது. ஓர் அவசர சூழலை எதிர்கொள்ள அரசு எந்த ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா?

நிறைவேற்றம்

உலகம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி பாகுபாடின்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்ள அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மக்களுக்கு நம்பிக்கையையும், உறுதியையும் அளிக்கும் வகையில் பேச வேண்டும். அதை விடுத்து, மக்களிடையே தவறான தகவல்களை பரப்பக்கூடாது; பீதியை ஏற்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, 2.01 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவினங்களை கொண்ட துணை மானிய கோரிக்கைகள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

Source link