புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் காரணமாக, நம் நாட்டில் வீட்டு உபயோக சமையல் காஸ்

புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் காரணமாக, நம் நாட்டில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, 14.2 கிலோ கொண்ட வீட்டு சமையல் சிலிண்டரின் எடையை, 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் — இஸ்ரேல் – அமெரிக்கா இடையே நான்காவது வாரமாக போர் நீடித்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 20 சதவீத அளவுக்கு கச்சா எண்ணெய் கப்பல் போக்கு வரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால், நம் நாட்டிற்கு இறக்குமதி கச்சா எண்ணெய் வரத்து குறைந்தது. இதனால், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டை போக்க, வேறு வழியில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கு முன், 27 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 41 நாடுகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், 14.2 கிலோ எடையை, 10 கிலோ எடையாக குறைத்து வினியோகிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

வழக்கமாக 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு காஸ் சிலிண்டர் சராசரியாக, 40 நாட்கள் வரை வரும் என கூறப்படுகிறது. அந்த வகையில், 10 கிலோ எடை கொண்ட வீட்டு காஸ் சிலிண்டர் 25 – 30 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால், வினியோக தொடரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரளவுக்கு சரிகட்ட முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன.

எடையை குறைக்கும் அதே வேளையில், விலையையும் அதற்கேற்றபடி குறைத்து, சிலிண்டரில் அதற்கான ஸ்டிக்கர்களை ஒட்டலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளன. எனினும், எடை குறைப்பு நாடு தழுவிய அளவில் போராட்டங்களுக்கு வித்திடும் என்பதால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

குறிப்பாக தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள சமயத்தில், எடை குறைப்பு சிலிண்டர் வினியோகம் பெரும் புயலை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டின் எரிவாயு தேவையில், 60 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும், 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. அந்த பாதையை ஈரான் மூடியிருப்பதால், நம் நாட்டின் நுகர்வு 17 சதவீதம் வரை சரிந்துள்ளது. தற்போதைக்கு நம் நாட்டின் தேசியக்கொடி ஏந்திய ஆறு எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

Source link