புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், பல்வேறு உலக நாடுகள் விலையை

புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால், பல்வேறு உலக நாடுகள் விலையை உயர்த்தியுள்ளன. அதுமட்டுமில்லாமல், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. இந்தப் போர் காரணமாக, உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல்வேறு உலக நாடுகளிடையே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது ஆசிய நாடுகளை மட்டுமின்றி, எரிபொருள் தேவைக்காக வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் வெகுவாக பாதித்துள்ளது. தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. காஸ் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் விலை 200 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இலங்கையில் 25 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தியா, சீனா, தென்கொரிய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீண்டும் நிலக்கரியின் பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மேலும், வாகனங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடு, மின்சாரப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு மற்றும் வேலைநேரக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க எந்தெந்த நாடுகள் என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதை கீழே காணலாம்.

பாகிஸ்தான்

* பள்ளிகள், கல்லூரிகளை 2 வாரம் மூட உத்தரவு

* அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை

* 50 சதவீத அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு

இலங்கை

* வார நடுவில் பள்ளிகள், பல்கலை மற்றும் அத்தியாவசிய பணிகள் அல்லா ஊழியர்களுக்கு விடுமுறை

* க்யூ ஆர் (QR) கோடு அடிப்படையிலான எரிபொருள் அட்டை மீண்டும் அறிமுகம்

வங்கதேசம்

* பல்கலை, வெளிநாட்டு பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள், பயிற்சி மையங்கள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்த உத்தரவு

* மார்ச் 8 முதல் ஒரு வாகனத்திற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே எரிபொருள் விநியோகம்

* 5 மணி நேர சுழற்சி முறை மின்வெட்டு

* காஸ் பற்றாக்குறையால் உரத் தொழிற்சாலைகள் மூடல்

பூடான்

* கேன்களில் எரிபொருள் விற்கத் தடை

* அவசர சேவைகளுக்கு முன்னுரிமை

* ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவு


பிலிப்பைன்ஸ்

* அரசு ஊழியர்களுக்கு 4 நாள் மட்டுமே வேலை

* அவசியமற்ற அரசுப் பயணங்களுக்குத் தடை

* தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு

வியட்நாம்

* பெட்ரோலியம் பயன்பாடு குறைப்பதற்காக, எரிபொருளில் எத்தனால் 10 சதவீதம் சேர்க்கும் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மியான்மர்

* எரிபொருள் வாங்க வருபவர்களுக்கு க்யூஆர் கோடு நடைமுறை அமல்

* ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள், ஒற்றைப்படை எண் தேதியிலும், இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்கள், இரட்டைப் படை எண் கொண்ட தேதியிலும் மட்டுமே இயக்க அரசு உத்தரவு

கம்போடியா

* ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள், ஒற்றைப்படை எண் தேதியிலும், இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்கள், இரட்டைப் படை எண் கொண்ட தேதியிலும் மட்டுமே இயக்க அரசு உத்தரவு

லாவோஸ்

* எரிபொருள் விற்பனை நிலையங்களில் 40 சதவீதம் மூடப்பட்டு விட்டன.

* சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தல்

* அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு.

ஆசிய நாடுகளைத் தவிர ஐரோப்பிய, ஆப்ரிக்காவில் உள்ள சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு;

* எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, வாரம் ஒரு முறை கார் பயணம் இல்லாத நாட்கள் என்ற நடைமுறையை மீண்டும் அமல்படுத்த நியூசிலாந்து திட்டமிட்டு வருகிறது. மேலும், விமான எரிபொருள் இல்லாததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

* ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா, வெளிநாட்டினருக்கு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது. உள்நாட்டினர், டேங்க்கில் டீசல் நிரப்பிக் கொள்ளலாம்; கூடுதலாக வேண்டுமெனில் 10 லிட்டர் மட்டுமே கிடைக்கும் அதற்கு மேல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* தாய்லாந்தில் அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்து போனவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட டீசல் கிடைக்கவில்லை என்ற பிரச்னை தாய்லாந்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

* எகிப்தில் மால்கள், உணவகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை முன்கூட்டியே மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒளிரும் விளம்பரப் பலகைகள் அணைக்கப்பட்டன.

* கென்யாவில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுபோன்ற எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link