புதுடில்லி 'மேற்காசிய போர் பதற்றத்தால், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

புதுடில்லி ‘மேற்காசிய போர் பதற்றத்தால், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மேலும், பல கப்பல்கள் எரிபொருள் ஏற்றி நம் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. எரிபொருள் சூழல் குறித்து தற்போதைக்கு கவலைப்பட வேண்டாம்’ என, டில்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசு விளக்கம் அளித்தது. மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, பிப்., 28 முதல் கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

இதனால், நம் நாடு உட்பட உலகளவில், எரிவாயு, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவு கிறது. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று மாலை, 5:00 மணி அளவில், மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், காங்., தேசிய தலைவரும், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார்.

தயார் நிலை

பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்.கம்யூ., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். கேரளாவில் இருப்பதால், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.

திரிணமுல் காங்., சார்பிலும் ஒருவர் கூட கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில், மேற்காசிய போர் பதற்றம் , அதனால் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது.

‘மேற்காசிய போர் பதற்றத்தால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. எரிபொருள் சூழல் குறித்து தற்போதைக்கு கவலைப்பட தேவையில்லை.

மேற்காசியாவில் நிலவும் நிலையற்றத் தன்மையையும் மீறி, பெட்ரோலிய பொருட்கள், சமையல் காஸ் இருப்பு போதுமான அளவில் உள்ளது’ என, எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடை குறித்த அச்சத்துக்கு மத்தியில், அத்தியாவசிய எரிபொருட் களை ஏற்றி மேலும் பல கப்பல்கள் நம் நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்ற முக்கிய தகவலையும் அதிகாரிகள் பகிர்ந்தனர்.

மோதல் தீவிரமடைந்தால், நாட்டின் தயார்நிலை குறித்தும், கச்சா எண்ணெய், சமையல் காஸ் இருப்பு குறித்தும் எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டன. பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ”நாட்டின் சமையல் எரிவாயு தேவையில், 60 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை இறக்குமதி மற்றும் முறையான வினியோகத் திட்டமிடல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது,” என்றார்.

ஆட்சேபனை

எனினும், இந்த விவகாரம் வெறும் விளக்கக் கூட்டத்துடன் நின்று விடாமல், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் முறையான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இக்கூட்டத்தின் வடிவத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த கார்கே, இது குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், பார்லி.,யில், கொரோனா தொற்று காலத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டது, நாட்டு மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டின.

‘தரகர்’ வேலை பார்ப்பது

பாக்.,கிற்கு புதிதல்ல!

ஈரான் – அமெரிக்கா மோதலில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ”பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சி ஒன்றும் புதிதல்ல. 1981 முதலே அமெரிக்காவால் அந்த நாடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானை போல நம் நாடு ஒருபோதும், ‘தரகர்’ வேலை பார்க்கும் நாடு கிடையாது,” என, குறிப்பிட்டார். மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் அனைவரையும் பாதிப்பதால், அது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.

Source link