புதுடில்லி: மேற்காசிய போர் பதற்றத்தால், பல்வேறு துறைகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில், நம்

புதுடில்லி: மேற்காசிய போர் பதற்றத்தால், பல்வேறு துறைகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில், நம் நாட்டின் சுற்றுலா துறை மட்டும் வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது.

கோடை விடுமுறையை மேற்காசிய நாடுகள், ஐரோப்பாவில் கழிக்க திட்டமிட்ட பயணியரின் கவனம், தற்போது உள்நாட்டு சுற்றுலா தலங்கள் மீதும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீதும் திரும்பி உள்ளது.

இதனால், உள்ளூர் சுற்றுலா துறை பலன் அடைந்துள்ளது.


விடுமுறை மகிழ்ச்சி

இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த மாதம் 28ம் தேதி துவங்கிய போர் காரணமாக, மேற்காசிய வான்வழியில் விமான போக்குவரத்து முடங்கிஉள்ளது.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு மேற்காசிய வான்வழி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இதனால், நம் நாட்டில் உள்ள சுற்றுலா பயணியர் பலர், இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டுஉள்ளனர்.

அதற்கு மாறாக, உள்ளூரிலேயே கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இதனால், உள்நாட்டில் உள்ள சுற்றுலா துறை தற்போது பரபரப்பாக இயங்க துவங்கி இருக்கிறது.

ஜம்மு – காஷ்மீர் அருகே உள்ள யூனியன் பிரதேசமான லடாக், ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா, குலு, மணாலி மற்றும் மேகாலயாவின் ஷில்லாங் என பிரபல மலைவாசஸ்தலங்களை நோக்கி நம் சுற்றுலா பயணியர் படையெடுக்க துவங்கியுள்ளனர்.

ஆன்மிக சுற்றுலா

அந்த வகையில் 65 சதவீத சுற்றுலா பயணியர், உள்ளூரிலேயே சிறந்த இடங்களை தேடி வருவதாக சுற்றுலா பதிவு தளமான, ‘வாண்டர்ஆன்’ தெரிவிக்கிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., கோவிந்த் கவுர் கூறுகையில், ”சுற்றுலா பயணியரின் பயணங்கள் மாறி வருவதை கடந்த சில வாரங்களாக உணர்ந்து வருகிறோம்.

உள்ளூரில் உள்ள சுற்றுலாதலங்கள் மற்றும் குறுகிய நாள் சுற்றுலாவுக்கே மக்கள் தற்போது அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

”அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் போன்ற குளிர் பிரதேசங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல 30 சதவீத சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்,” என்றார்.

ஆன்மிக சுற்றுலாவுக்கும் மக்கள் அதிக அளவில் முக்கியத்துவம் தருவதாக தெரியவந்தள்ளது.

அந்த வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலமான ரிஷிகேஷ் செல்ல 23 சதவீதம் பேர் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலைவாசஸ்தலங்கள் மட்டுமின்றி, நாட்டின் மிக முக்கியமான நகரங்களை சுற்றி பார்க்கும் ஆர்வமும் சுற்றுலா பயணியரிடையே பெருகி இருக்கிறது.

ராஜஸ்தானில் உள்ள ஏரிகளின் நகரமான உதய்பூருக்கு செல்ல, எப்போதும் இல்லாத அளவாக இந்த ஆண்டு 69 சதவீதம் பேர் முன்பதிவு செய்துஉள்ளனர்.

ஆர்வம்

இதற்கு அடுத்தபடியாக 47 சதவீதம் பேர் நீல நகரம் என அழைக்கப்படும், ஜோத்பூரை கண்டுகளிக்க திட்டமிட்டுஉள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகர், திரிபுராவின் அகர்தலா மீதும் சுற்றுலா பயணியரின் கவனம் திரும்பி இருக்கிறது. அதே வேளையில், வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கு செல்வதற்கான ஆர்வம் முழுதாக குறைந்து விடவில்லை.

அது நம் அண்டை நாடுகளின் மீது விழுந்து இருக்கிறது. வியட்நாம், நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை சுற்றுலா பயணியரின் விருப்ப பட்டியலில் உள்ளது.

Source link