புதுடில்லி: மேற்கு வங்கத்தில், ஜனாதிபதி அவமதிக்கப்பட்டது குறித்து இன்று மாலை5 மணிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என அம்மாநில தலைமைச்செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டம் கோசைப்பூரில் சர்வதேச சந்தால் சமூக மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். முதலில், இம்மாநாடு பன்சிதேவாவின் பிதான்நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் கோஜய்பூருக்கு மாற்றியது. இங்கு அதிகமான மக்கள் கூட முடியாது.
மேலும், ஜனாதிபதியை வரவேற்க, முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் வரவில்லை.இது குறித்து ஜனாதிபதி திரவுபதிமுர்மு கூறுகையில், என்னை ஏன் இங்கு வர மம்தா அனுமதிக்கவில்லை என எனக்கு தெரியவில்லை. அவர் அதிருப்தியாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதனால் தான் இடம் மாற்றப்பட்டதா?
ஜனாதிபதியை வரவேறக முதல்வரும், மற்ற அமைச்சர்களும் வர வேண்டும். ஆனால், வரவில்லை. சமீபத்தில் தான் இங்கே கவர்னர் மாற்றப்பட்டு இருக்கிறார். அதனால் அவரால் வர முடியவில்லை என்பது புரிகிறது எனக்கூறியிருந்தார்.இதனையடுத்து, நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவை மேற்கு வங்கமும், திரிணமுல் காங்கிரசும் அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து மேற்கு வங்க தலைமைச்செயலாளர் நந்தினி சக்கரவர்த்தியிடம் மத்திய உள்துறை செயலர் கோவிந்த மோகன் அறிக்கை கேட்டுஉ ள்ளார்.அதில்,
1. ஜனாதிபதியை வரவேற்க முதல்வர், அமைச்சர்கள், தலைமைச்செயலர், டிஜிபி ஏன் செல்லவில்லை.
2 ஜனாதிபதிக்காக அமைக்கப்பட்ட கழிவறையில் ஏன் தண்ணீர் வரவில்லை
3. ஜனாதிபதி செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த பகுதியில் குப்பை நிரம்பியிருந்தது.
4. டார்ஜிலிங் மாவட்ட கலெக்டர், சிலிகுரி போலீஸ் கமிஷனர், கூடுதல் மாவட்ட கலெக்டர் அனைவரும் பொறுப்பானவர்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
