புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை, திரிணமுல் காங்கிரஸ்

புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் டில்லியில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, ‘வெளியே போ’ எனக் கூறி தேர்தல் கமிஷனர் தங்களை அவமதித்ததாக, அக்கட்சியின் எம்.பி., டெரெக் ஓ பிரையன் குற்றஞ்சாட்டி உள்ளார். இதை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் கமிஷன், அவர் தான் பெரும் கூச்சலிட்டு, அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

முன்னதாக, திரிணமுல் காங்கிரசின் எதிர்ப்புக்கு இடையே, மாநிலம் முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 91 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக, தேர்தல் கமிஷன் – திரிணமுல் காங்., இடையே பனிப்போர் நீடிக்கிறது.

ஏற்புடையதல்ல

இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைநகர் டில்லியில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்களை, திரிணமுல் காங்., ராஜ்யசபா குழு தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் அக்கட்சி குழுவினர் நேற்று சந்தித்து பேசினர்.

தேர்தல் கமிஷனின் குறைகளை சுட்டிக்காட்டிய போது, ‘வெளியே போ’ என கூறி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தங்களை அவமதித்து விட்டதாக டெரெக் ஓ பிரையன் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மேற்கு வங்க சட்டசபை தேர்தல், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்களுடன் ஆலோசிக்கச் சென்றோம். கூட்டம் துவங்கிய ஏழு நிமிடங்களுக்குள், எங்களை பார்த்து, ‘வெளியே போ’ என ஞானேஷ் குமார் கூறினார்.

இதனால் அங்கிருந்து வெளியேறினோம். பார்லி.,யில் நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி. எங்களை பார்த்து அவர் இப்படி கூறுவது ஏற்புடையதல்ல.

தேர்தல் கமிஷனுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இதுவரை ஒன்பது கடிதங்கள் எழுதி உள்ளார். இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என ஞானேஷ் குமாரிடம் கேட்டோம்; அவரிடம் பதில் இல்லை.

ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்கிறீர்களே, இப்படி இருந்தால் எப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த முடியும் என கேட்டோம். அதற்கு அவர், ‘வெளியே போ’ என்றார். இப்படியொரு அவமானத்தை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தங்கள் குழுவில் இருந்த எம்.பி., ஒருவர், ‘நாட்டின் வரலாற்றிலேயே லோக்சபா, ராஜ்யசபாவில் பதவிநீக்க நோட்டீசை பெற்ற ஒரே தலைமை தேர்தல் கமிஷனர் நீங்கள் தான்’ என, ஞானேஷ் குமாரை பார்த்து கிண்டலாக குறிப்பிட்டதாகவும் டெரெக் ஓ பிரையன் தெரிவித்தார்.

மறுப்பு

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பார்த்து டெரெக் ஓ பிரையன் தேவையில்லாமல் கூச்சலிட்டார்; மேலும், அவரை பேச விடாமல் தடுத்தார்.

தேர்தல் கமிஷன் அறையின் கண்ணியத்தை காக்கும்படி, டெரெக் ஓ பிரையனை ஞானேஷ் குமார் கேட்டுக் கொண்டார். ஆனால், அவர் கேட்கவில்லை. தொடர்ச்சியாக உரத்த குரலில் பேசுவதும், அநாகரிகமாகவும் அவர் நடந்து கொண்டார்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

சவால்

இதற்கிடையே, சமூக வலைதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்ட பதிவு:

மேற்கு வங்க தேர்தல் இந்த முறை நிச்சயமாக அச்சமற்ற, வன்முறையற்ற, மிரட்டல்கள் இல்லாத, முறைகேடுகள் இல்லாத மற்றும் ஓட்டுச்சாவடி ஆக்கிரமிப்புகள் இல்லாத தேர்தலாக இருக்கும். இதை தான், திரிணமுல் காங்., குழுவினருடன் விவாதித்தோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதை திட்டவட்டமாக மறுத்த டெரெக் ஓ பிரையன், ”இது போன்ற உரையாடல் ஒருபோதும் நடக்கவில்லை. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பொய் சொல்கிறார்; முடிந்தால் அவர் நிரூபிக்கட்டும். தேர்தல் கமிஷனுக்கு தைரியம் இருந்தால், எங்கள் சந்திப்பு குறித்த ஆடியோ அல்லது வீடியோ ஆதாரங்களை வெளியிடட்டும்,” என சவால் விடுத்தார்.

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் கமிஷன் – திரிணமுல் காங்., இடையேயான மோதல் முற்றி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது முற்றிலும் பொய். சந்திப்பின் போது நான் நேரில் இருந்தேன். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் சொன்ன ஒரே வார்த்தை, ‘வெளியே போ’ என்பது தான். –சாக்கேத் கோகலே ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்.,

தேர்தல் கமிஷன் பொய் சொல்கிறது. தேர்தல் தொடர்பாக எங்களிடம் எந்த பேச்சும் நடத்தவில்லை. எங்களை பார்த்து, ‘வெளியே போ’ என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறினார். -சாகரிகா கோஷ் ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்.,

Source link