புதுடில்லி: ம த்திய அரசின் செயலர்கள், பிரதமருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் போது, பிரதமர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பர். அதே சமயம், இது தொடர்பாக தங்கள் கருத்துகளையும் தெரிவிப்பர்; தேவையில்லாமல் பேச மாட்டார்கள்.
ஆனால், ஒரு மூத்த செயலர், பிரதமர் கூட்டத்தில் எதையோ பேசி மாட்டிக் கொண்டார். அந்த அதிகாரி ஒரு தமிழர்; கர்நாடகா கேடரைச் சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம் பெற்றவர். அத்துடன், அமெரிக்காவின் ஹார்வேடு பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர்.
கர்நாடகாவில் பணியாற்றிய போது, ‘எனக்கு வரும் பைல்களில் குறிப்புகள் கன்னடத்தில் இருக்கக் கூடாது; ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்’ என்று சொல்லி, பெரும் பிரச்னையை ஏற்படுத்தியவர். இவருடைய குரு, மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன். அவரைப் போலவே, இவரும் பரபரப்பாக செயல்படுபவர்.
கர்நாடக அரசியலில் முதல்வர் சித்தராமையாவிற்கும், துணை முதல்வர், டி.கே. சிவகுமாருக்கும் உள்ள பிரச்னைகள் குறித்து, அடிக்கடி பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தருவாராம், இந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி; இது, பிரதமர் காதுகளுக்கும் செல்லும்; அதனால் தன் மதிப்பு உயரும் என்று எதிர்பார்த்திருந்தார்.
சமீபத்தில், ஈரான் பிரச்னை தொடர்பாக, அனைத்து துறை செயலர்கள் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்றது. எப்படி எரிபொருள் விவகாரத்தை சமாளிப்பது, அதற்காக என்னென்ன ஏற்பாடுகளை மேற்கொள்வது என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. சுற்றுலாத் துறையின் செயலராக உள்ள இந்த அதிகாரியும் இதில் பங்கேற்றார்.
‘ஈரான் விவகாரத்திற்கு பிறகும் சுற்றுலா துறை சிறப்பாக செயல்படுகிறது; எந்த பிரச்னையும் இல்லை’ என்று, தன் துறை குறித்து ஏகத்துக்கும் பேசி உள்ளார். கூட்டம் முடிந்தவுடன், கேபினட் செயலரிடம், ‘அதிகப்பிரசங்கித் தனமாக பேசுகிறாரே இந்த செயலர்’ என்றாராம் பிரதமர்.
இந்த கூட்டத்திற்கு பின், சுற்றுலாத்துறை செயலராக இருந்தவர், சிறுபான்மைத்துறைக்கு துாக்கி அடிக்கப்பட்டார். ‘அதிகாரிகளுக்கு நாவடக்கம் தேவை என, அடிக்கடி கேபினட் செயலர் கூறுவார். அது, எவ்வளவு முக்கியமானது என்பது, இந்த விவகாரத்திற்கு பின் தான் எங்களுக்கு புரிகிறது’ என்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பேசிக்கொள்கின்றனர்.
