புதுடில்லி : ரயில் புறப்படுவதற்கு, 8 மணி நேரத்துக்கு முன், உறுதியான டிக்கெட்டை ரத்து செய்தால், இனி பணம் திரும்ப

புதுடில்லி : ரயில் புறப்படுவதற்கு, 8 மணி நேரத்துக்கு முன், உறுதியான டிக்கெட்டை ரத்து செய்தால், இனி பணம் திரும்ப கிடைக்காது. அதற்கான புதிய விதியை ரயில்வே விரைவில் அமல்படுத்த உள்ளது.

ரயில்வே துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, பயண டிக்கெட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் அடுத்தடுத்து சீர்திருத்தங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

‘ஆன்லைன்’

இதற்காக தயாராகி வரும் திட்டங்கள் குறித்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலோட்டமாக விவரித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ரயில்வே துறையில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். குறிப்பாக ஐந்து முக்கிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.ரயில்வே வலையமைப்பு மற்றும் பயணியருக்கான சேவைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அமலாகவுள்ளன. அந்த வகையில், இனி உறுதியான டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன், ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது.மற்ற பயணியருக்கு இருக்கை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்வதை தவிர்க்கவும் இந்த விதி அமலாகவுள்ளது.

ரயில்வே கட்டுமான திட்டங்களில் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஏற வேண்டிய ரயில் நிலையத்தை மாற்ற விரும்பினால், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் வரை, ‘ஆன்லைன்’ வாயிலாக மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

‘தத்கால்’ டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, ஆதார் அடிப்படையிலான ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்ப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத 3 கோடி ரயில்வே முன்பதிவு போலி ஐ.டி.,க்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உப்புக்கு ஸ்டீல் பெட்டி

ரயில்களில் உப்பு மூட்டைகளை ஏற்றிச் செல்வது, ரயில்வே துறைக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. ஏனெனில், உப்பு ஏற்றிச் செல்லப்படும் பெட்டிகள் விரைவில் துருப்பிடித்து விடுகின்றன. தவிர, உப்பு மூட்டைகளை ஏற்றி, இறக்குவதிலும் அதிக நேரம் பிடிக்கிறது.சில நேரங்களில், மூட்டைகள் கிழிந்து உப்பு கீழே கொட்டி வீணாகி விடுகிறது. இதை கருத்தில் கொண்டு, துருப்பிடிக்காத ஸ்டீல் உலோகத்தில் பெட்டிகளை செய்து, அதில் உப்பு ஏற்றிச் செல்ல ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. உப்பு உற்பத்தி செய்யப்படும் இடங்களிலேயே இந்த ஸ்டீல் கன்டெய்னர் பெட்டிகள் வைக்கப்பட்டு உப்பு ஏற்றப்படும். அதன் பின், ரயிலில் இருந்து இறக்கியவுடன், அப்படியே கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிச் செல்ல முடியும். இதனால், உப்பு சரக்கு ஏற்றுவதற்கான நேரம் மிச்சமாகும். கடந்த பிப்ரவரியில் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஸ்டீல் கன்டெய்னர் மூலம் உப்பு ஏற்றிச் செல்லும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ரயில்வே துறையின் இந்த முன்னெடுப்பால் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யும் தமிழகம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பெருமளவு பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்வதற்கான சரக்கு போக்குவரத்திலும் மாற்றங்கள் கொண்டு வர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வாகனங்களை ஏற்றிச் செல்வதற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரண்டு அடுக்கு கொண்ட பெட்டிகள் அறிமுகமாகவுள்ளன.

Source link