புதுடில்லி: ராகுலை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா இன்றும்

புதுடில்லி: ராகுலை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா இன்றும் முடங்கியது. அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், ஜன., 28ல், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. கடந்த 1ல், 2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதியதாகக் கூறப்படும், இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார். ‘வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள்காட்டி சபையில் பேசக் கூடாது’ என, சபாநாயகர் ஓம் பிர்லாவும் கண்டிப்பு காட்டினார்.

அன்றைய தினம் முதல் அவை செயல்பட விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்றும் (பிப் 10) லோக்சபா கூடியதும் ராகுலை பேச அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா முடங்கியது. அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

விரைவில்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. விரைவில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஓம் பிர்லாவுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Source link