புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.,க்களில், 32 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன; 14 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில், மொத்தம் உள்ள 233 உறுப்பினர்களில், 229 உறுப்பினர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை, ஏ.டி.ஆர்., அமைப்பு ஆய்வு செய்தது. இதில், ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா எம்.பி.,யின் பதவி தற்போது காலியாக உள்ளது.
கொலை வழக்கு
மேலும், மூன்று எம்.பி.,க்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வுக்கு கிடைக்கவில்லை. இந்த ஆய்வில், சமீபத்தில் தேர்வான 37 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பிரமாண பத்திரங்களும் உட்படுத்தப்பட்டன.இதில், 229 எம்.பி.,க்களில், 73 பேர், அதாவது 32 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில், 36 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு எம்.பி., தன் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நான்கு எம்.பி.,க்கள், மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதுதவிர, மூன்று எம்.பி.,க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்சி வாரியாக பா.ஜ.,வில் 27 பேர், காங்கிரசில் 12 பேர், திரிணமுல் காங்., ஆம் ஆத்மியில் தலா நான்கு பேர், மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளில் தலா மூன்று எம்.பி.,க்கள் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதிக சொத்து
ராஜ்யசபா எம்.பி.,க்களில் 31 பேர் அதாவது, 14 சதவீதம் பேர் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் சேர்த்துள்ளனர். பிரதான அரசியல் கட்சிகளில் பா.ஜ.,வில் ஆறு பேர், காங்.,கின் ஐந்து பேர், ஒய்.எஸ்.ஆர்., காங்., கின் நான்கு பேர், ஆம் ஆத்மியின் இரண்டு பேர், பி.ஆர்.எஸ்., கட்சியில் இருவர், தேசியவாத காங்.,கின் மூன்று பேர், சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளன. ஒட்டுமொத்த ராஜ்யசபா எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 120.69 கோடி ரூபாயாக உள்ளது. இதில் அதிகபட்ச சராசரியாக ஒய்.எஸ்.ஆர்., காங்., எம்.பி.,க்களின் சராசரி சொத்து மதிப்பு 522.63 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதேபோல், அதிக சொத்துக்கள் உடைய ராஜ்யசபா எம்.பி.,யாக பி.ஆர்.எஸ்.,யைச் சேர்ந்த பண்டி பார்த்தசாரதி உள்ளார். இவருக்கு, 5,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஏ.டி.ஆர்., குறிப்பிட்டுள்ளது.
