புதுடில்லி: வடகிழக்கு மாநிலம் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மூன்று பெண்களை, இன ரீதியாக துஷ்பிரயோகம் செய்து,

புதுடில்லி: வடகிழக்கு மாநிலம் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மூன்று பெண்களை, இன ரீதியாக துஷ்பிரயோகம் செய்து, மிரட்டிய அண்டை வீட்டுக்காரர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள், தெற்கு டில்லி மாளவியா நகரில், வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, மூன்று பெண்கள் தங்கியுள்ள நான்காவது மாடியில் உள்ள வீட்டில் துளையிடுதல் மற்றும் மின் ஒயர் மாற்றும் பணி நடந்தது. அப்போது, தூசு மற்றும் குப்பைகள் கீழ் தளத்தில் விழுந்தன. கீழ் தளங்களில் குடியிருப்போர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் ஹர்ஷ் சிங் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும், அருணாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களையும் இன ரீதியாக அவதுாறாகவும், ஆபாசமாகவும் பேசி திட்டினர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த இளம்பெண்கள், சமூக வலைதளத்தில் பதிவிட்டு நியாயம் கோரினர். ஏராளமானோர் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மாளவியா நகர் போலீசில் மூன்று பெண்களும் கொடுத்த புகார்படி ஹர்ஷ் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கட்டடத்தை புதுப்பிக்க வேண்டியிருப்பதல், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று பெண்களையும் வீட்டை காலி செய்யுமாறு கட்டட உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.

Source link