புதுடில்லி: வர்த்தக உறவில் சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டாவ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளதார மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது; கடந்த 20 ஆண்டுக்கு முன் சீனாவுடன் நடந்த வர்த்தக உறவில் பல்வேறு பாடங்களை நாங்கள் (அமெரிக்கா) கற்றுக் கொண்டோம். எனவே, அப்போது, மேற்கொண்ட தவறுகளை இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் செய்யவில்லை. அமெரிக்க நலன்களை பாதுகாப்பதில், இந்தியாவுடன் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக தெளிவோடு அணுகுவோம்.
அனைத்து சந்தைகளையும் மேம்படுத்த நாங்கள் அனுமதிப்போம். பல வர்த்தக விவகாரங்களில் இந்தியா எங்களை விட முன்னோக்கி செல்வதை நாங்கள் பார்க்கிறோம். அமெரிக்கா பர்ஸ்ட் என்பது அமெரிக்கா மட்டும் என்று அர்த்தமில்லை. மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும்.
பிரதமர் மோடி இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்று விரும்புவதைப் போலத் தான், அமெரிக்க தலைசிறந்த நாடாக உருவாக வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விரும்புகிறார். 21ம் நூற்றாண்டு இந்தியாவின் எழுச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். எங்கள் நாட்டின் நலன் கருதியே நான் இங்கு வந்திருக்கிறேன். நமது கூட்டாண்மையை வலுப்படுத்துவது இந்தியாவிற்கும் நன்மை பயக்கும் என்று நாங்கள் கருதுகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
