புதுடில்லி: வளைகுடா நாடுகளின் மிக முக்கியமான கடல் வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, நம் நாட்டின் எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக பேச்சு நடத்தியதன் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முடங்கியது
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அந்த பிராந்தியத்தில் போர் பதற்றம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் ஆக்ரோஷமாக தாக்கி வருகிறது. மேலும், வளைகுடா பிராந்தியத்தின் மிக முக்கிய கடல் வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால், எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கியது.
ஐரோப்பா, ஆசியா என உலகின் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்ததால், சமையல் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல முடங்கத் துவங்கியுள்ளது.
நம் நாட்டிலும் சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், உணவகங்கள், தேநீர் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
அதே சமயம் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் காஸ் சிலிண்டர் விற்பதை தடுக்க, மத்திய அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை அதிரடியாக அமல்படுத்தியது. எனவே, நிலைமை படிப்படியாக சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடை விதிப்பு
இந்தச் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பயணிக்க அனுமதி தருமாறு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொடர்பு கொண்டு பேசினார்.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, இந்திய எண்ணெய் கப்பல்கள் அந்த வழியாக செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம், எல்.என்.ஜி., எனப்படும் திரவமயமாக்கப்பட்ட எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் இந்திய கப்பல்கள் தடங்கலின்றி, மேற்காசியாவில் இருந்து நம் நாட்டிற்கு வந்து சேரவுள்ளன.
அந்த வகையில், சவுதி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட முதல் இந்திய எண்ணெய் கப்பல், மும்பை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
லைபீரியா நாட்டின் கொடியை தாங்கிய, ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ என்ற அந்த எண்ணெய் கப்பல், சவுதியின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, மும்பைக்கு பத்திரமாக நேற்று வந்து சேர்ந்தது.
இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அரசு அனுமதி அளித்தாலும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் எண்ணெய் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
வலியுறுத்தல்
இதற்கிடையே, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்ற சர்வதேச நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீயன் நோல் பரோட் ஆகியோருடன் பேச்சு நடத்தி, எண்ணெய் கப்பல்களின் முக்கிய பிராந்திய வழிகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால், வினியோக தொடரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
