புதுடில்லி: விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், ஏர்

புதுடில்லி: விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவின் பெரும்பாலான விமானங்களில் தொடர்ந்து கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால், பயணிகளின் பயணப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி விமான நிறுவனங்களின் 754 விமானங்களில் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. அதில், 377 விமானங்களில் தொடர்ந்து கோளாறு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவின் பெரும்பாலான விமானங்களில் அதிகளவு தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று லோக் சபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக கொடுத்த புள்ளி விபரத்தில் கூறியிருப்பதாவது; இண்டிகோவுக்கு சொந்தமான அதிக விமானங்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 405 விமானங்களில் சோதனை செய்ததில், 148 விமானங்களில் மீண்டும் மீண்டும் கோளாறு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியா குழுமத்தின் பெரும்பாலான விமானங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என மொத்தம் 267 விமானங்களில் சோதனை நடத்தப்பட்டதில், 191 விமானங்களில் தொடர் பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, 72 சதவீத விமானங்களில் பிரச்னைகள் நிலவுகின்றன. ஏர் இந்தியாவின் 166 விமானங்களில் 137ம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 101 விமானங்களில் 54லும் கோளாறுகள் இருக்கின்றன.

அதேபோல, ஸ்பைஸ் ஜெட்டின் 43 விமானங்களில் 16லும், ஆகாசா ஏரின் 32 விமானங்களில்14லும் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானங்களிலும் விரிவான சோதனைகளை நடத்தப்பட்டது. இதுவே குறைபாடுகள் கண்டறியப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்கக் காரணம்,’ என்று கூறினர்.

Source link