புதுடில்லி, விமான எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ‘ஏர் இந்தியா’ நிறுவனம் விமான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
விமான எரிபொருள் விலை, வினியோகத் தடங்கல்களால் மார்ச் மாத துவக்கத்தில் இருந்து, விமான இயக்கச் செலவில் 40 சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. டில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களில் நிலவும் அதிகப்படியான உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டுவரி காரணமாக விமான நிறுவனங்களுக்கு பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது.
எனவே, விமான கட்டணத்தில், எரிபொருள் கூடுதல் கட்டணங்கள் மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளன. இவை, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானங்களுக்கும் பொருந்தும்.
இன்று முதல் உள்நாடு மற்றும் சார்க் நாடு இடையேயான பயணங்களுக்கு 399 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். மேற்கு ஆசிய நாடுகளுக்கான பயணங்களுக்கு 919 ரூபாயும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 5,516 ரூபாயும், ஆப்ரிக்க நாடுகளுக்கு 8,278 ரூபாயும் உயர்த்தப்படுகின்றன.
வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கான விமான டிக்கெட் கட்டணம் 16,800 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. மார்ச் 18ம் தேதியில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வரும். இதே போல் ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கான டிக்கெட் கட்டணமும் விரைவில் உயர்த்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
