புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9ஆம் தேதி (09.04.2026) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (03.04.2026) ரோடு ஷோ மேற்கொண்ட்டார். அப்போது அவர் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார்.
மற்றொரு புறம், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய் இன்று (04.04.2026) புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக முதன்முறையாகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி சார்பில் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரும் 6ஆம் தேதி (06.04.2026) தனித்தனியாகப் புதுச்சேரியில் பரப்புரை செய்ய உள்ளனர். அதன்படி புதுச்சேரிக்கு வருகை தரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி விரிவான பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதுடன், அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டவும் திட்டமிட்டுள்ளது. மாநில அந்தஸ்து, புதுச்சேரியின் நிதி நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து அவர் தனது உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் ஏப்ரல் 6ஆம் தேதி காலையில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில் அன்று மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரப் மேற்கொள்ள உள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் 16 இடங்களிலும் திமுக 14 இடங்களிலும் போட்டியிட உள்ளன, இருப்பினும் சில தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே ‘நட்பு ரீதியான போட்டியும் நிலவுவது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி நாளை (05.04.2026 – ஞாயிற்றுக்கிழமை) தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
