புளோரிடா: வரலாற்று சிறப்புமிக்க நிலவு விண்வெளி பயணத்துக்காக, நான்கு விண்வெளி வீரர்களுடன் அமெரிக்காவின்

புளோரிடா: வரலாற்று சிறப்புமிக்க நிலவு விண்வெளி பயணத்துக்காக, நான்கு விண்வெளி வீரர்களுடன் அமெரிக்காவின் நாசாவுக்கு சொந்தமான, ‘ஆர்டெமிஸ் – 2’ விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் பாய்ந்தது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடைசியாக, 1972ல், ‘அப்போலோ -17’ திட்டத்தின் மூலம், மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது. அதன்பின், நிலவுக்கு பல நாடுகள் விண்கலங்களை அனுப்பினாலும், மனிதர்கள் அனுப்பப் படவில்லை.

இந்நிலையில், மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக, 50 ஆண்டுகளுக்கு பின், வரலாற்று சிறப்புமிக்க ஆர்டெமிஸ் – 2 விண்கலம் வெற்றிகரமாக நேற்று முன்தினம் மாலை, புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பயணிக்கின்றனர். இந்த விண்கலம் ஏவப்பட்ட முதல் 24 மணி நேரத்தில், பூமியின் ஒரு உயரிய சுற்று வட்டப்பாதையை அடைந்து அங்கு சுற்றி வரும்.

அதன் பின், பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து புறப்பட்டு, மூன்று நாட்களில் நிலவை அடையும்.

நிலவுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம் நிலவில் தரை இறங்காது. மாறாக நிலவை சுற்றி 4,600 மைல் தொலைவில் பயணம் செய்து விட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும். இப்பயணம் 10 நாட்களில் முடிந்து, பசிபிக் பெருங்கடலில் விண்கலம் வந்து இறங்குவதுடன் நிறைவடையும்.

இத்திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், வருகிற 2028ல் நிலவில் மனிதர்களை தரை இறக்கும் ஆர்டெமிஸ் – 3 திட்டம் செயல்படுத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

இந்தியாவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, இந்திய விண்வெளி ஆய்வு மையம் வருகிற 2040ம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

Source link