முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை நேரில் சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவருக்கும் இடையிலான நட்பு மூன்றாவது தலைமுறையாக தொடர்கிறது. இதை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பல மேடைகளில் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். அன்பில் தர்மலிங்கம் – கருணாநிதி, அன்பில் பொய்யாமொழி – மு.க.ஸ்டாலின் வரிசையில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நெருங்கிய நட்பு கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
உதயநிதி vs அன்பில் மகேஷ் – எதும் பிரச்சினையா?
இருப்பினும் இருவருக்கும் இடையில் ஈகோ கிளாஷ் ஏற்பட்டு சரியாக பேசி கொள்வதில்லை என்று கடந்த சில மாதங்களாக விமர்சனங்கள் எழுந்தன. அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர் வீடுகளில் ரெய்டு நடந்த போது கூட உதயநிதி கண்டனம் தெரிவிக்கவில்லை என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதுபோன்று இல்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
உதயநிதி ஸ்டாலின் உரை ! உன்னிப்பாக கவனித்த அமைச்சர்கள்
புழல் சிறையில் நண்பனை சந்திக்கும் உதயநிதி
தற்போது சிறையில் தனது நண்பனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக உதயநிதி ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றுள்ளார். வழக்கு விசாரணையில் கழகம் உடன் நிற்போம் என்றும், சட்ட ரீதியாக அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து கொள்வோம் என்றும் நம்பிக்கை அளிக்கக்கூடும். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அன்பில் பொய்யாமொழி – மு.க.ஸ்டாலின் நட்பு
குறிப்பாக திமுக இளைஞரணி தொடக்க கால வளர்ச்சியில் அன்பில் பொய்யாமொழியின் பங்கும் முக்கியமானது. கட்சி ரீதியாக மு.க.ஸ்டாலினுடன் மிகவும் நெருங்கி பயணித்தவர். எனவே தான் 1999ல் அன்பில் பொய்யாமொழியின் மரணம் மு.க.ஸ்டாலினை பெரிதும் பாதித்தது. ஒரு நண்பனையோ, ஒரு சகோதரனையோ இழக்கவில்லை. எனது ஆன்மாவின் ஒரு பகுதியை இழந்திருக்கிறேன் என்று வேதனைப்பட்டார்.
திமுகவில் அன்பில் மகேஷ்க்கு முக்கியத்துவம்
இந்த சூழலில் தான் இவரது மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மு.க.ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். 2016, 2021, 2026 என மூன்று தேர்தல்களில் வாய்ப்பு கொடுத்தார். இதில் சமீபத்திய தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். அதேசமயம் 2021ல் திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார். தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்பாக அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்தார். திருச்சியில் கே.என்.நேருவிற்கு இணையாக கட்சியின் மற்றொரு முகமாக வளர்வதற்கு வாய்ப்புகள் வழங்கினார்.
தனியார் பள்ளிகள் அனுமதி வழக்கு- அன்பில் மகேஷ் கைது
தற்போது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பெயரும் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஏ1 அறையை ஒதுக்கீடு செய்து, அவரது உடல்நிலைக்கு ஏற்ப உணவு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Source link
