கடந்த மார்ச் 15-ம் தேதி, பாட்னா-டாடாநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த ஒருவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்துள்ளன.
இதை அந்தப் பயணி இந்திய ரயில்வேயிடம் புகாரளித்திருக்கிறார்.
இதையடுத்து, நேற்று ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதத்தையும், உணவு வழங்கிய நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதத்தையும் விதித்துள்ளது இந்திய ரயில்வே. கூடவே, அந்த உணவு நிறுவனத்தின் கான்ட்ராக்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘ரயிலில் கொடுக்கப்பட்ட உணவு சரியில்லை… அதை புகாரளிக்க, உடனடியாக இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்தது’ போன்ற செய்திகளை அடிக்கடி படித்திருப்போம்.
இந்தப் புகார்களை நாம் செய்ய வேண்டுமென்றால், எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
> RailMadad ஆப் அல்லது வலைதளத்தில் ஆடியோ, போட்டோ அல்லது வீடியோவை சமர்ப்பித்து புகாரளிக்கலாம்.
> Rail One ஆப் வைத்திருப்பவர்களுக்கு ‘RailMadad’ ஆப்ஷன் அதிலேயே இருக்கும். அதனால், அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.
> உதவி எண்ணான ‘139’-க்கு, போன் செய்தோ, ‘MADAD’ என்று டைப் செய்தோ எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம்.
> சிலர் எக்ஸ் பக்கத்தில் இந்திய ரயில்வே துறை, இந்திய ரயில்வே துறை அமைச்சர், IRCTC-யை டேக் செய்து பதிவிட்டு புகாரளிக்கிறார்கள். இந்த வழிமுறையைக் கூட ஃபாலோ செய்யலாம்.
இவை ரயிலில் உணவு சரியில்லை என்றால் மட்டும் புகாரளிப்பதற்கு அல்ல. ரயில் சுத்தமாக இல்லை என்றாலோ, ரயிலில் உள்ள கழிவறை சுத்தமாக இல்லை என்றாலோ கூட இதை செய்யலாம்.
‘குறு குறு பார்வைகள்’, ‘தேவையில்லாத செய்கைகள்’ போன்றவற்றை ரயிலில் பயணிக்கும் பெரும்பாலான பெண்கள் சந்தித்திருப்பார்கள்.
இவர்கள் கூட, இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஆனால், எதற்காக இருந்தாலும், தகுந்த ஆடியோ, வீடியோ, போட்டோ ஆதாரம் வைத்துக்கொள்வது நல்லது.
