காரிமங்கலம் : அரசு திட்டங்களுக்கான பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைக்குள்ளான, தர்மபுரி, தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார், பாலக்கோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிந்துகளின் ஓட்டுக்காக கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
தர்மபுரி, தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்குமார். எம்.பி.,யாக இருந்த காலத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அதியமான்கோட்டை போன்ற இடங்களில் அரசு சார்பில் நடந்த பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தார். பின், ‘கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அழைத்து வாருங்கள்’ என பேசி, பூமி பூஜையை இழிவுபடுத்தினார். இதற்கு, தி.மு.க.,வினரே சில இடங்களில் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் பாலக்கோடு தொகுதி, தி.மு.க., வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காலை, பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட கெரகோடஹள்ளியில் செலகாரப்பன், செலகாரம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. இதில், தி.மு.க., மாநில வர்த்தக அணி செயலர் தர்மசெல்வன், வேட்பாளர் செந்தில்குமார் உட்பட, தி.மு.க., நிர்வாகிகள் பலர் கோவிலுக்கு சென்றனர்.
செந்தில்குமார் கோவிலில் பய பக்தியுடன் சுவாமியை வழிபாடு செய்து, நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டார். தற்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால், ஹிந்துக்களின் ஓட்டுகளை பெற வேறுவழியின்றி, கோவிலில் சரணடைந்து, சுவாமி தரிசனம் செய்து வருகிறார். ‘எல்லாம் நடிப்புடா சாமி’ என்று, இதை பார்த்த தி.மு.க.,வினரே எரிச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
