பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீதான ஆள் கடத்தல் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலமாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவானதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பெண்ணின் தந்தை வனராஜா மற்றும் அவரது சகாக்கள், தனுஷின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்து தனுஷின் 17 வயது தம்பியை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், சிறுவனை கடத்திச் சென்றுள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி, இந்த விவகாரம் குறித்து தனுஷின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறை தங்களை தேடுவதை அறிந்ததும் வாகனத்தில் இருந்த வனராஜா உள்ளிட்ட மூன்று பேரும், தனுஷின் தம்பியை அவரது வீட்டிலேயே கொண்டு வந்து விட்டுள்ளனர். இருப்பினும் வழக்குப்பதிவு செய்து திருவிலங்காடு போலீசார், 3 பேரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெகன் மூர்த்தியும், ஏடிஜிபி ஜெயராமன் ஏற்கெனவே நல்ல நட்பில் இருந்ததாகவும், சம்பவம் நடந்த தினத்தன்று ஜெயராமனின் காரை கடத்தல் கும்பல் எடுத்துச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாகப் பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி.ஜெயராமை காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக  ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென பெண்ணின் தந்தை வனராஜா உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் எட்டப்பட்டு விட்டதால் தங்களுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (27-03-26) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தீவிரமானது என்றும் இந்த வழக்கை ரத்து செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று வாதிடப்பட்டது. மேலும், இந்த வழக்கு மக்கள் பாதுகாப்பு தொடர்பானது என்றும் எனவே இந்த வழக்கை ரத்து செய்தால் மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து தங்களுடைய வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக மனுதாரர் வனராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link