பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் திடீரென விபத்துக்குள்ளான நிலையில், அதனை ஓட்டிச் சென்ற விமானி மற்றும் கேப்டன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
விஜயபுரா மாவட்டம் பாபலேஸ்வர் தாலுகாவில் உள்ள மங்களூரு கிராமத்தில், ரெட்பேர்ட் ஏவியேஷன் எனும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக பயிற்சி விமானம் இன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது விபத்துக்குள்ளானது. கல்புர்கியிலிருந்து பெலகாவி நோக்கிப் பயணித்த செஸ்னா 172 ரக விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த கேப்டன் மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் மற்றும் பாபலேஸ்வர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்த இருவரையும் மீட்டு விஜயபுராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்களின் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
