பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. இப்போது மீண்டும் ஒரு புதிய

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. இப்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

கேரளாவின் வயநாடு பகுதிக்கு, 10 கோடி ரூபாய் கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. காரணம், 2024ல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மறுவாழ்விற்காக இந்த நிதியை ஒதுக்கியுள்ளார் சித்தராமையா.

ஏற்கனவே, கடந்தாண்டு ஆகஸ்டில் வயநாட்டிற்கு, 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார் சித்தராமையா. இப்போது மீண்டும், 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். ‘பக்கத்து மாநிலத்திற்கு உதவி செய்வது நம் கடமை’ என்கிறார் அவர். ‘சோனியா மகள் பிரியங்கா, வயநாடு தொகுதி எம்.பி., அதனால் தான் இவ்வளவு தாராளம்’ என்கின்றனர். ‘கர்நாடக அரசின் நிதிநிலை படுமோசமாக உள்ளது’ என, முதல்வர் சித்தராமையாவே தெரிவித்து உள்ளார்.

ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. தெருக்களை சீரமைக்க நிதி இல்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு, துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் தர பணம் கிடையாது என, இவ்வளவு பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கும்போது, எதற்கு, 10 கோடி ரூபாயை கேரளாவுக்கு அதுவும் காங்., – எம்.பி., தொகுதிக்கு தர வேண்டும்?’ என, பா.ஜ.,வும், மற்ற கட்சிகளும் கேள்வி எழுப்பி உள்ளன.

பிரியங்கா தொகுதி மீது, சித்தராமையாவின் பாசம் ஒன்றும் புதிதல்ல. 2023 பிப்ரவரியில், வயநாட்டில் காட்டு யானை தாக்கி ஒரு விவசாயி இறந்தார். உடனே அவருக்கு, 15 லட்சம் நிதி உதவி அறிவித்தார் சித்தராமையா. இதுவும் அப்போது புயலை கிளப்பியது.

ஆனால், ‘இந்த பணத்தை அந்த விவசாயியின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு தரவேயில்லை. வெறும் அறிவிப்போடு நின்று விட்டது. இதுவரை, கர்நாடக அரசு பணம் தரவில்லை’ என, கேரள அமைச்சரே அறிவித்தார்.

இந்த விவகாரம் அரசியலில் புயலை கிளப்பியதால், ‘எங்களுக்கு கர்நாடக அரசின் பணமே வேண்டாம்’ என, விவசாயி குடும்பம் மறுத்து விட்டது. இதையடுத்து, சித்தராமையா அந்த அறிவிப்பை, ‘வாபஸ்’ பெற்றார்.

Source link