பெங்களூரு: ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு அணி வெற்றியுடன் துவக்கியது. கோலி, படிக்கல் அரைசதம் விளாசினர்.
வருடம் தோறும் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடரின் 19வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
இஷான் அரைசதம்: ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் (11), அபிஷேக் சர்மா (7), நிதிஷ் குமார் ரெட்டி (1) ஏமாற்றினர். ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஹெய்ன்ரிச் கிளாசன். சுயாஷ் சர்மா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இஷான் கிஷான், 28 பந்தில் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்த போது ஷெப்பர்டு பந்தில் கிளாசன் (31) அவுட்டானார். அபினந்தன் பந்தில் இஷான் (80) ஆட்டமிழந்தார். அனிகேத் வர்மா (43) நம்பிக்கை தந்தார்.
ஐதராபாத் அணி 20 ஓவரில் 201/9 ரன் எடுத்தது. டேவிட் பெய்ன் (6), உனத்கட் (4) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஜேக்கப் டபி 3 விக்கெட் வீழ்த்தினார்.
படிக்கல் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் (8) ஏமாற்றினார். பின் இணைந்த விராத் கோலி, தேவ்தத் படிக்கல் ஜோடி கைகொடுத்தது. டேவிட் பெய்ன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் படிக்கல். ஜெயதேவ் உனத்கட் ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் கோலி. ஹர்ஷல் படேல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய படிக்கல், 21 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த போது ஹர்ஷ் துபே பந்தில் படிக்கல் (61 ரன், 4X6, 7X4) அவுட்டானார்.
கோலி விளாசல்: ஈஷன் மலிங்கா வீசிய 12வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட கேப்டன் ரஜத் படிதர் (31) ஓரளவு கைகொடுத்தார். ஜிதேஷ் சர்மா (0) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய கோலி, 33 பந்தில் அரைசதம் எட்டினார். ஹர்ஷல் படேல் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டிய கோலி வெற்றியை உறுதி செய்தார்.
பெங்களூரு அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. கோலி (69 ரன், 5X6, 5X4), டிம் டேவிட் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
அஞ்சலி
கடந்த ஆண்டு (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடந்த பெங்களூரு அணியின் சாம்பியன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகள் காலியாகவிடப்பட்டன. போட்டி துவங்குவதற்கு முன், மைதானத்தில் இருந்த அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு வீரர் கோலி, பயிற்சியின் போது அணிந்திருந்த தனது ஜெர்சியில் 11 என்ற எண் இடம் பெற்றிருந்தது.
7வது முறை
முதல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 7வது முறையாக (2008, 2017, 2019, 2021, 2024, 2025, 2026) விளையாடுகிறது.
இரண்டாவது கேப்டன்
ஐதராபாத் அணியை வழிநடத்தும் 2வது இளம் கேப்டன் (27 ஆண்டு, 253 நாள்) என்ற பெருமை பெற்றார் இஷான் கிஷான். முதலிடத்தில் கேன் வில்லியம்சன் (27 ஆண்டு, 244 நாள், 2018) உள்ளார்.
முதல் முதலாய்..
* 19வது சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதின.
* முதல் ‘டாஸ்’ பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர் வென்றார்.
* முதல் ஓவரை ஜேக்கப் டபி (பெங்களூரு) வீசினார்.
* முதல் சிக்சர் அபிஷேக் சர்மா (ஐதராபாத்) விளாசினார்.
* முதல் பவுண்டரி டிராவிஸ் ஹெட் (ஐதராபாத்) விரட்டினார்.
* முதல் விக்கெட்டை ஜேக்கப் டபி கைப்பற்றினார்.
16வது முறை
ஒட்டுமொத்த ‘டி-20’ அரங்கில் 16வது முறையாக சிக்சர் அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார் அபிஷேக். இது, இத்தொடரில் 5வது முறை.
3000 ரன்
இத்தொடரில் 3000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார் இஷான் கிஷான். இதுவரை 120 போட்டியில், 3078* ரன் (ஒரு சதம், 18 அரைசதம்) எடுத்துள்ளார்.
