'பெட்டியை வாங்கிக்கொண்டு தி.மு.க., அணியில் சேருவதா?': நயினார் நாகேந்திரன்

திருச்சி: ”பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு தான், தி.மு.க., கூட்டணியில் சேருகின்றனர்,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருச்சியில், வரும் மார்ச் 11ல் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

கூட்டம் நடத்துவதற்காக மாத்துார், பஞ்சப்பூர், பொன்மலை ஜி கார்னர் ஆகிய மூன்று இடங்களை, நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர்.

முன்னதாக, திருச்சி ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

தமிழகத்தில், மாணவர்களிடம் கஞ்சா புழக்கம், போலீஸ் விசாரணையில் மரணங்கள், கொலைகள், ரவுடியிசம் என சட்டம் – ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது.

தி.மு.க., கூட்டணி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, எங்கள் தே.ஜ., கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்

கடந்த 2021 தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் தி.மு.க.,வினர் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.

தற்போது இருக்கும் தே.ஜ., கூட்டணி, கடந்த 2021 தேர்தலிலும் இப்படியே இருந்திருந்தால், 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்.

பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு தான் தி.மு.க., கூட்டணியில் பலரும் சேர்ந்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது நாங்கள் மதிப்பு வைத்துஉள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை, அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்துக்கு, அனைத்து நிதிகளையும் மத்திய அரசு முறையாக வழங்குகிறது. ஆனால், நிதியை பெற்றுக்கொண்டு, மத்திய அரசு தரவில்லை என தி.மு.க., அரசு பொய் சொல்கிறது.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு வேறு துறைக்கு பயன்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link