பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20%க்கு மேல் அதிகரிக்க வேண்டும்: இந்திய சர்க்கரை சங்கம் வலியுறுத்தல்

புதுடில்லி: பெட்ரோலில் கலக்கும் எத்தனால் அளவை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் எனவும், சர்க்கரை ஆலைகளிலிருந்து தயாரிக்கும் எத்தனாலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் இந்திய சர்க்கரை தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சில தினங்களுக்கு முன் இந்திய சர்க்கரை தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரம் முடிந்த பிறகு எத்தனால் விவகாரத்தில் கவனம் செலுத்துகிறோம் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூறினர்.

மேலும் சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசு கடந்த 2025 முதல் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்யலாம் என்று அனுமதி அளித்தது. இதனால், எரிபொருள் இறக்குமதி குறைந்து, கிட்டத்தட்ட 1.36 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எத்தனால் வினியோக ஆண்டில், அதாவது கடந்த நவ., முதல் பிப்., வரை உறுதியளிக்கப்பட்ட 292 கோடி லிட்டரில் 119 கோடி லிட்டர் எத்தனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தானிய அடிப்படையிலான எத்தனால் 209 கோடி லிட்டர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இது உறுதியளிக்கப்பட்ட 766 கோடி லிட்டரில் 27 சதவீதம் ஆகும். இதுகுறித்து அமைச்சரிடமும் தெரிவித்திருக்கிறோம்.

சர்க்கரை ஆலைகள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே, சர்க்கரை ஆலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.

எத்தனால் கைகொடுக்கும் பல்ராம்பூர் சினி மில்ஸ் மேலாண் இயக்குநர் விவேக் சரோகி கூறியுள்ளதாவது: எத்தனால் தயாரிப்பதால் சர்க்கரை துறை வலிமை பெறுவதுடன் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வளம் பெறும். வீடுகளுக்கு வழங்கும் எரிவாயு மற்றும் தொழில்துறைகளுக்கான எரிபொருளில் எத்தனாலை கலந்து பயன்படுத்த வேண்டும். இதனால் எரிபொருளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும்.

Source link