புதுடில்லி:அடுத்த மாதம் முதல், பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு நாடு முழுதும் கட்டாயமாக உள்ளது. இந்நிலையில், அதை 25 சதவீதமாக அதிகரிக்கலாமா என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கத்திடம் ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் நடந்து வரும் போர், கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 85 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. தற்போது பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால், 100 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக, கச்சா எண்ணெய் சார்பை மேலும் குறைக்க மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
எத்தனால் கலப்பை 25 சதவீதமாக அதிகரித்தால், வாகனங்களின் மைலேஜ், இன்ஜின், செயல்திறன், மாசு வெளியேற்றம் உள்ளிட்டவற்றில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த தரவுகளும் இல்லை என வாகன நிறுவனங்கள் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது உள்ள வாகனங்கள் இ20 பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இ25 பெட்ரோலுக்கு சோதனை செய்யப்படவில்லை என்றும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான விரிவான சோதனையை மேற்கொள்ள கால அவகாசம் தேவை என கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை உருவாக்க வாகன நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. டாடா, டொயோட்டா, மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள், 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் கார்களை உருவாக்கி வருகின்றன.
