புதுடில்லி:மேற்காசிய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ஏற்படும் வருவாய் இழப்பை சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகத்துக்கு டீலர்கள் முன்கூட்டியே பணம் கொடுக்க வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
நீடிக்கும் மேற்காசிய போரால், முக்கிய கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 100 டாலரை தாண்டியுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு ஏற்ப, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சமாளித்து, தங்களது வர்த்தக நடவடிக்கைகளை சிரமம் இல்லாமல் தொடர்வதற்காக, டீலர்களுக்கு அனுப்பும் பெட்ரோல், டீசலுக்கு முன்கூட்டியே பணம் கொடுக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கு முன் டீலர்களுக்கு 5 நாட்களில் திருப்பி செலுத்தினால் போதும் என்ற சலுகையுடன் கடனுக்கு எரிபொருள்கள் வினியோகிக்கப்பட்டு வந்தன.
கடும் பாதிப்பு எண்ணெய் நிறுவனங்கள் திடீரென முன்பணம் கேட்பது டீலர்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. நாங்களும் அரசு துறைகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு கடனுக்கு தான் எரிபொருள் வழங்குகிறோம். இந்த புதிய நடைமுறை எங்களது தொழிலை கடுமையாக பாதிக்கும். – அஜய் பன்சால், தலைவர், அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம்.
